தேர்தல் பத்திர முறைகள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது. இந்த சட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இந்த தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ வங்கி வெளியிடும். இந்திய குடியுரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி, ரூ.1000 முதல் ரூ. 1கோடி வரை அரசியல் கட்சிகளுக்கு நிதி அனுப்பலாம். தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படத்தன்மை இல்லை என்று கூறி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், தேர்தல் பத்திரம் முறை என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
அரசிடம் கணக்கு, கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தீர்ப்புகள் மூலம் நீதிமன்றங்கள் கூறியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சமே அதுதான் இவ்வாறான விவகாரங்களுக்கும் தேவைப்படுகிறது. குறிப்பாக இந்த நீதிமன்றம் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றிய தகவல் அறியும் உரிமையை அங்கீகரித்துள்ளது. தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 உட்பிரிவு 1 உட்பிரிவு ஏவை மீறும் வகையில் உள்ளது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திரம் சட்டம் மட்டும் அல்ல, தேர்தல் பத்திரங்களை வழங்க கார்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதிக்கும் வகையில் செய்யப்பட்ட கம்பெனி சட்டதிருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல தேர்தல் பத்திரம் மூலம் திரட்டப்பட்ட நிதியை நிதி அளித்தவர்களே திரும்ப செலுத்த அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.