தீபாவளியை கொண்டாடும் விதமாக கனடா அரசு சிறப்பு தபால் தலை வெளியீடு!
கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளியை கொண்டாடும் விதமாக இந்தியா மற்றும் கனடா வெளியிட்ட தபால் தலை வெளியாகி 5 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக கனடா அரசு சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் கொண்டாடும் தீபத் திருநாளான தீபாவளியின் வருகையைக் குறிக்கும் வகையில் கனடா அரசு சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு கனடா மற்றும் இந்திய அரசு சேர்ந்து தபால் தலை ஒன்றை வெளியிட்டது. அந்த தபால் தலை அந்த ஆண்டு தீபாவளியன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 5வது ஆண்டை கொண்டாடும் விதமாக இந்த தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடா தபால்துறை, ”இந்த முத்திரை கிறிஸ்டின் டோ என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ரெனா சென் என்பவரால் விளக்கப்பட்டது. தீபாவளியின் போது வீடுகள் மற்றும் கோயில்களின் நுழைவுவாயில்கள் மற்றும் முகப்புகளில் போடப்பட்டிருக்கும் தோரணங்கள் மற்றும் அழகிய மாலைகளை கொண்டு இந்த தபால் தலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ” என விளக்கம் அளித்தது.
முன்னதாக கனடாவின் ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி கொண்டாட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும், ஒட்டாவாவுக்கான இந்திய உயர் ஆணையருமான சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.