இந்தியா குறித்து குற்றம்சாட்ட #ForeignInterferenceCommission செல்லும் கனடா!
வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் இந்தியா குறித்து கனடா முறையிட இருக்கிறது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரும், கனட குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் இந்தியாவுக்கும், கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கும் சம்பந்தம் உள்ளது என ஆரம்பத்தில் இருந்து இந்தியா மீது கனடா குற்றம்சாட்டி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த குற்றசாட்டை மறுத்துவரும் இந்தியா, தற்போது வரை தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில், கனடா அரசு அங்கே உள்ள 6 இந்திய தூதர்களை கனடாவில் இருந்து வெளியேற்றி உள்ளது. இதற்கு பதிலடியாக, கனடா தூதர்கள் வரும் அக்டோபர் 19-ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியா - கனடா உறவில் சிக்கல்கள் எழுந்துக்கொண்டிருந்த நிலையில், இந்தியாவும், கனடாவும் மாறி மாறி தூதர்களை வெளியேற்றி உள்ளது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் (Foreign Interference Commission) இந்தியா மீதான குற்றச்சாட்டை எழுப்ப கனடா திட்டமிட்டிருக்கிறது.
நாளை கனடா பிரதமர் ட்ரூடோ இந்த ஆணையம் முன்பு ஆஜராகிறார். ஆணையத்தில் இந்தியா மீது சரமாரியாக குற்றச்சாட்டை எழுப்ப உள்ளார். இப்படி செய்வதன் மூலம் இந்தியா-கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.