“தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க தர்க்கரீதியான ஒரே ஒரு காரணம் கூற முடியுமா?” - கனிமொழி எம்.பி. கேள்வி!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டின் கல்விக்கான நிதியை தருவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பில் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.
அதன் தொடர்ச்சியாக டெல்லியில் திமுக மாணவரணி சார்ப்பில் தமிழ்நாட்டின் கல்விக்கான நிதியை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடன் இணைந்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தி மொழியின் ஆதிக்கம் பல்வேறு வட மாநில மொழிகள் சிதையக் காரணம் என்று கூறியிருந்தார். இது வட மாநிலங்கள் வரை கவனம் பெற்று அரசியலில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் அஸ்வினி வைஷ்வ், முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கருத்தை எதிர்கட்சித் தலைவர் ஏற்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த சூழலில் தமிழ்நாட்டு மக்கள் இந்தி மொழியை கற்பதற்கான காரணத்தை கூற வேண்டுமென கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டு மக்கள் ஏன் இந்தி கற்க வேண்டும் என்பதற்கு தர்க்கரீதியான ஒரே ஒரு காரணத்தை யாராவது கூற முடியுமா?”
இவ்வாறு கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.