"நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா?" - எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ம் தேதி பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, புனித வெள்ளியையொட்டி கடந்த 18ம் தேதி அரசு விடுமுறை என்பதால், சட்டப்பேரவை கூடவில்லை.
தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சட்டப்பேரவைக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. காலை 9.30 மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் நடைபெற்றது. தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது எனவும் கடந்த 4 ஆண்டுகளில் எந்த மருத்துவக்கல்லூரியும் கொண்டுவரப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிமுக கொண்டுவந்த 11 மருத்துவக் கல்லூரிகளின் பணியை நிறைவு செய்தது திமுகதான் என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நீட் கொண்டுவரப்பட்டது. பிள்ளையார் சுழி போட்டது நீங்கள்தான்" என குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர் "அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு பரிசாகத்தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது" என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வை யார் கொண்டுவந்தது, அதனால்தான் இவ்வளவு சிக்கல் என்று கூறுகிறார். நீட் சிக்கலை போக்க அதிமுகவுக்கு இப்போதும் வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணியில் இருப்போம் என அதிமுகவால் சொல்ல முடியுமா?" என கேள்வி எழுப்பினார்.