“தாய்மொழிக்கு துரோகம் இழைத்தவர்கள் தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கலாமா?” - ஆளுநர் ரவிக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துவரும் நிலையில், “தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது. இருமொழி கொள்கையால் தமிழ்நாடு இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்” என ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், “பீகாரின் தாய்மொழியான போஜ்பூரி, மைதிலி போன்ற மொழிகளை இந்தியிடம் அடகு வைத்து அழித்தொழித்து, தங்கள் தாய்மொழிக்கு துரோகம் இழைத்தவர்கள் தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கலாமா?” என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“பிரபல ஆளுமைகள் கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை, சிவ நாடார், இந்திரா நூயி, ரகுராம் ராஜன் (IMF & RBI), வெங்கடராமன் (RBI), ரங்கராஜன் (RBI), சிவி ராமன் (Nobel prize), சுப்ரமணிய சந்திரசேகர் (Nobel prize), வெங்கட்ராமன் (Nobel prize), அப்துல் கலாம், சிவன், நாரயணன், மயில்சாமி அண்ணாதுரை, ஏ.ஆர். ரகுமான், எம்.எஸ். சுவாமிநாதன், நடராஜன் சந்திரசேகரன் போன்ற எண்ணற்ற உலகளாவிய ஆளுமைகளை உருவாக்கிய தமிழ்நாட்டிற்கு கல்வி மற்றும் மொழி கொள்கைகளை கற்றுதர நீங்கள் யார்?
பீகாரின் தாய்மொழியான போஜ்பூரி, மைதிலி போன்ற மொழிகளை இந்தியிடம் அடகு வைத்து அழித்தொழித்து, தங்கள் தாய்மொழிக்கு துரோகம் இழைத்தவர்கள் தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கலாமா? எங்கள் தாய்மொழியை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு தான் உள்ளது. பீகார் பின்பற்றும் மும்மொழிக் கொள்கையால் உருவாக்கப்பட்ட 10 உலகளாவிய ஆளுமைகளை பட்டியலிடுங்கள்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையின் தேவை உள்ளதா இல்லையா என்பதை முடிவு செய்ய தமிழக மக்கள் ஜனநாயக முறைப்படி ஒரு அரசை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். முடிந்தால் போஜ்பூரியை காப்பாற்றி உங்களை வளர்த்த பீகார் மண்ணுக்கு வயது முதிர்ந்த காலத்திலாவது நன்றி உடையவராய் இருங்கள்!”. எனக் குறிப்பிட்டுள்ளார்.