Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“Tan tea நிர்வாகம் மாஞ்சோலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலுமா?” - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?

06:22 PM Jul 22, 2024 IST | Web Editor
Advertisement

Tan tea நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலுமா? என Tan tea நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், “ஜுலை 4, 5-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 436 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் தென்காசி, நெல்லை, கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இலவச வீட்டுமனைப் பட்டாவில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, பாப்பான்குளம் பகுதியில் 240 வீடுகள் உள்ள நிலையில், ரூ.7 லட்சம் மாநில அரசும் ரூ.1.5 மத்திய அரசும் வழங்கும். மீதமுள்ள தொகையை அந்த மக்கள் செலுத்த வேண்டும். Tan tea நிர்வாகத்தால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலாது" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் ஏன் அரசால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலாது? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில், “வனத்துறையின் அறிக்கையில் அதற்கான விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது. வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “மாஞ்சோலை பகுதி உயிரினப் பன்மயம் மற்றும் சுற்றுச்சூழலில் முக்கிய பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பேண குத்தகைக்கு விடுவதற்கு முந்தைய நிலைக்கு மாஞ்சோலையை கொண்டு சென்று பராமரிப்பது அவசியம். தேயிலை தோட்ட தொழிலாளர்களில் பலர் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். பலர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் வந்துள்ளனர்.

ஆகவே 3 தலைமுறைகளாக வனத்தினுள் வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் கையாள்வதிலும் கேள்வி எழுகிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் அசாம் மற்றும் கேரளாவில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அரசியல் ஆதாயங்களை பெறுவதற்காக, சிலர் பொய்யான வாக்குறுதிகளை தந்து. குழப்பி வருகிறார்கள். இந்த வழக்கில் வனப்பகுதிகளில் சலுகை வழங்கப்படும் பட்சத்தில், அதனை பிற தொழிலாளர்களும் கோரினால், மேற்கு தொடர்ச்சி மலையின் பழமையான காடுகள் இழக்கப்படும் சூழல் உருவாகும். இந்த காரணங்களால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை டேண்டீ நிர்வாகத்திற்கு வழங்குவதும் இயலாதது" என குறிப்பிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் கூடுதல் மானியம் வழங்கலாமே? வீடுகள் வழங்கையில் மீதமுள்ள தொகையை அம்மக்களிடமிருந்து வசூலிக்காமல் இருக்கலாமே? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில், உரிய தகவல் பெற்று தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டது.

பிபிடிசி நிறுவனம் தரப்பில், "மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கான 75% செட்டில்மெண்ட் தொகை ரூ.11 கோடியே 32 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் " என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கில், “Tantea நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலுமா? என அறிய விரும்புகிறது. ஆகவே tantea நிர்வாகம் தனது தரப்பு விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசு, டேண்டீ நிர்வாகம், பிபிடிசி நிர்வாகம் இணைந்து 2 நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக கலந்தாலோசித்து, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். கூடுதல் செயலர் தரத்திற்கு குறையாத அலுவலரால் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
High courtManjolaiManjolai workersNews7Tamilnews7TamilUpdatesTan Teatea estatesTN Govt
Advertisement
Next Article