"இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?" - சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்மிருதி ராணி பேச்சு!
"இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?" என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து வாக்கு சேகரித்த ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
” பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் தங்கள் பிரதமர் வேட்பாளர் மோடி என்று பெருமையுடன் சொல்லலாம். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தங்களது பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? இந்தியாவின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் தொலைநோக்குத்
திட்டமாக உள்ளது. ஆனால் இந்தியா கூட்டணியின் திட்டங்கள் என்னவென்று சொல்ல முடியுமா?
இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு தலைவரும் கிடையாது, நீதியும் கிடையாது. அவர்கள் நாட்டை சூறையாடத்தான் செயல்படுகிறார்கள். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்திற்காக சென்றபோது, அங்கே இந்தியா கூட்டணி கட்சியினரே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றனர். ஆனால் டெல்லியில் நட்பு பாராட்டுகின்றனர்.
மதம் குறித்தும் விமர்சனம் செய்த போது நாடே எதிர்ப்பு தெரிவித்தது. தேசம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். நமது குடும்பம் மோடி குடும்பம். நமது குடும்பத்திற்கு வாக்களியுங்கள், அவர்கள் குடும்பத்திற்கு வாக்களிக்காதீர்கள் “ என ஸ்மிருதி ராணி தெரிவித்தார்.