8 மாவட்டங்களை மூழ்கடித்த மழை, வெள்ளத்தால் சிவகாசியில் 'டல்' அடித்த காலண்டர் தொழில் - உற்பத்தியாளர்கள் கவலை!
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சிவகாசியில் ரூ.10 கோடி அளவுக்கு காலண்டர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2024 -ம் புத்தாண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்கு காலண்டர்கள் வாங்கி வருகின்றனர். சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சகத்தொழில் நடந்து வருகிறது. இந்நிலையில், 2024ஆண்டிற்க்கான தினசரி காலண்டர், மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசியில் உள்ள 100க்கும் மேற்பட்ட அச்சகங்களில் காலண்டர் தயாரிப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புத்தாண்டு பிறக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், 50 சதவிகித காலண்டர்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் பெய்த கனமழையால் சிவகாசியில் காலண்டர் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் காலண்டர்கள் ஆர்டர் கொடுத்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டுமே காலண்டர்களை கேட்டு வாங்கி வருகின்றனர். பெரும்பாலும் ஆர்டர் கொடுத்தவர்கள் காலண்டர் பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை என
உற்பத்தியாளர்கள் தெரிவிக்கி்ன்றனர்.
இதுகுறித்து காலண்டர் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 சதவிகிதம் மட்டும் காலண்டர் விலை உயர்ந்துள்ளதால் அதிகமான ஆர்டர்கள் வந்தன. சென்னை, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் பெய்த கனமழை சிவகாசி காலண்டர் தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டர் கொடுத்த பல பேர் காலண்டா் கேட்கவில்லை. இதனால் தயாரான காலண்டர்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றோம். இதனால், சிவகாசியில் பல லட்சம் மதிப்புள்ள காலண்டர்கள் முடங்கி கிடக்கிறது.
மேலும், டிசம்பர் மாதம் இறுதியில் சுமார் 20 சதவீதம் வாடிக்கையாளர்கள் காலண்டர் ஆர்டர்கள் கொடுப்பது வழக்கம். இவர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி காலண்டர்களை சப்ளை செய்வோம். ஆனால், இந்த வருடம் இந்த 8 மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் இதுவரை வரவில்லை. இதனால் சிவகாசியில் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள காலண்டர்கள் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.