கனமழை எதிரொலி : நீலகிரி பைகாரா அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை!
நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் பைகாரா அணை நிரம்பி, உபரி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜுலை 29ம் தேதி அன்று வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள 12 அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, உதகை அருகேயுள்ள முக்குறுதி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில், அங்கிருந்து உபரி நீர் பைகாரா அணைக்கு வந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள் : “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதனால், பைகாரா அணை முழு கொள்ளளவான 110 அடியில் 90 அடி நிரம்பியதால் உபரி
நீர் திறந்துவிடபட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பைகாரா அணை
நிரம்பியுள்ளதை தொடர்ந்து மூன்று மதகு மூலம் வெளியேற்றப்படும் நீரானது மாயார்
வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு சென்றடையும்.
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பே உள்ளது. பைகாரா அணை திறக்கப்பட்டுள்ளதால் மாயார் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது . இதனால்
மாயார் ஆற்றில் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என வனத்துறையினர்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே சாலை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை சீரமைக்கப்பட்டதால் , பைகாரா படகு இல்லம் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படகு சவாரி
மேற்கொள்ளப்பட உள்ளது.