விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி! - முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்னியூர் சிவா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு 10,602 ஓட்டுகளும் கிடைத்தன.
இதையும் படியுங்கள் : நீடித்த நிலையான வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலை! -நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்...
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் கௌதம சிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது அன்னியூர் சிவாவுக்கு கிடைத்த வெற்றி இல்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.