"My life in full என்ற புத்தகத்தை வாங்கி படிங்க..." பெண்கள் மாநாட்டில் நடிகர் சூர்யா பேச்சு!
இந்திரா நூயி எழுதிய "My life in full" என்ற புத்தகத்தை வாங்கி படிங்கள் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர், அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காக உதவி வருகிறார். பல ஆண்டுகளாக இவரது அறக்கட்டளையின் உதவியுடன் ஏராளமான மாணவர்கள் தங்கள் கல்வி கனவை நனவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான சர்வதேச மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசியதாவது:
"அகரம் ஆரம்பித்த 15 வருடத்தில் 15,000 பேர் படித்து முடித்தும், படித்து கொண்டும் இருக்கிறார்கள். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு 30 சதவீதத்திற்கும் குறைவாக தான் உள்ளது. விண்வெளி, டிஜிட்டல் என அனைத்து துறையிலும் பெண்கள் வளர்ந்து வருகின்றனர்.
என்னை சுற்றி உள்ள பெண்களை ரொம்ப சக்தி வாய்ந்த பெண்களாக தான் பார்த்து உள்ளேன். பெண்களால் முடியாதது ஒன்றும் இல்லை என்று தான் இன்றும் நம்புகிறேன். நிறைய படிப்பதும், மார்க் வாங்குவதும் பெண்கள் தான். இந்தியாவை எங்கையோ கொண்டு போறது பெண்கள் மட்டும் தான். உடல் வலிமையை நம்பி வெற்றி பெரும் கிரிக்கெட்டில் பெண்கள் சாதித்து கொண்டு இருக்கிறார்கள்.
வெறும் லாபம் சம்பாதிக்கிறதுக்கு மட்டும் இல்லாமல் மக்களுக்கான உண்மையான தேவையை எடுத்து வருவதும் பெண்கள் மட்டுமே. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. உள் மனதில் நீங்கள் என்ன ஆகவேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாக மாற முடியும். ஆண்கள் உழைப்பதை விட பெண்கள் உழைப்பது மிக முக்கியம்.
ஆண்கள் செய்யும் அதே வேலையை பெண்கள் வெகு விரைவாக முடிப்பார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பெப்சி நிறுனத்தின் முன்னாள் தலைவருமான இந்திரா நூயி எழுதிய "My life in full" என்ற புத்தகத்தை வாங்கி படிங்கள். அதில் பல தகவல்களை ஆச்சரியமாக பார்த்தேன். "
இவ்வாறு நடிகர் சூர்யா பேசினார்.