“ஆனா இது புதுசா இருக்குண்ணே... புதுசா இருக்கு” - போலீஸ் மனைவிக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட கணவர் - சிக்கியது எப்படி?
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த மே 22ம் தேதி கிருஷ்ணா தேவி என்ற பெண், லோக்பந்து மருத்துவமனை சாலையில் உள்ள தனது மைத்துனர் வீட்டிற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் தேவியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
இதனையடுத்து இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் திருட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் மே 26 அன்று, ராஜ்புத் என்பவரை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. அது என்னவென்றால் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டவர் ஒரு கான்ஸ்டபிளின் கணவர் என்பது தெரியவந்துள்ளது. தனது மனைவியின் தங்க சங்கிலியை அணிந்துகொண்டு ராஜ்புத் கோயிலுக்கு சென்றுள்ளார். சென்ற இடத்தில் சங்கிலியை தொலைத்துள்ளார்.
இதனையடுத்து அயோத்தியில் பணிபுரியும் தனது மனைவிக்கு பரிசாக தங்கச் சங்கிலியைக் கொடுப்பதற்காக கிருஷ்ணா தேவியின் சங்கிலியை பறித்துள்ளார். தொடர் விசாரணையில் ராஜ்புத் ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக இருந்ததாகவும், பின்னர் சொந்தமாக ஒரு கடையைத் திறந்ததாகவும், அது நஷ்டத்தைச் சந்தித்ததாகவும் கூறியுள்ளார். பெரும் நஷ்டத்தை தொடர்ந்து திருட்டில் ஈடுபட முடிவு செய்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.