ஜோதிடரை அணுகிய புஸ்ஸி ஆனந்த்? தள்ளிப்போகிறதா #TVK முதல் மாநாடு?
தவெக முதல் மாநாட்டின் தேதி ஜனவரி மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அரசியலில் தடம் பதித்துள்ளார். சமீபத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஜய், அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் மாநாடு என்பதால், பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்து, திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், ஈரோடு என பல்வேறு இடங்களை பரிசீலித்த பிறகு, விக்கிரவாண்டியை இறுதி செய்திருக்கிறார். அங்கு வி.சாலை என்ற இடத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தனர்.
மாநாட்டுக்கான அனுமதி கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், எஸ். பி. அலுவலகத்திலும் கடந்த 28 ஆம் தேதி மனு அளித்திருந்தார். அதே நாளில் ஏ.டி. எஸ்.பி. திருமால், டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டுமே 5 ஏக்கர் நிலம், மாநாட்டுக்கு வந்து செல்ல 3 வழிகள், உணவு, குடிநீர், கழிவறை, ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுப் பகுதியில் காவல்துறையின் பாதுகாப்பும், தீயணைப்புத்துறையின் ஒத்துழைப்பும் வேண்டும் என்று கோரியுள்ளனர். மாநாட்டுக்கு தேர்வாகியுள்ள இடம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் அருகிலேயே, 300 மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மாற்று தேதி குறிப்பதற்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என விஜய் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநாட்டுக்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.