கிருஷ்ண ஜெயந்தியால் களைகட்டிய வியாபாரம்...நாடு முழுவதும் ரூ.25,000 கோடி வர்த்தகம்!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.25,000 கோடிக்கும் அதிகமான அளவுக்கு பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோயில்கள் மற்றும் வீடுகளில் கிருஷ்ணரை வழிபட்டனர். இதன்காரணமாக நேற்று கோயில்களில் கூட்டம் களைகட்டியது. இந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ. 25,000 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றதாக அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், "கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூக்கள், பழங்கள், இனிப்பு வகைகள், அலங்கார உடைகள், அலங்காரப் பொருள்கள், பால், தயிர், வெண்ணெய், உலர் பழங்கள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்கள் சனாதன பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியாக உள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துகிறது" என்றார்.