இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது - போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!
இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தொழிலாளர்களுடனான அரசின் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று (ஜன. 8) நடந்த இறுதிகட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல காத்திருக்கும் பொதுமக்களும் கலக்கமடைந்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதை எதிர்கொள்ள தயார் என அறிவித்திருந்த நிலையில், மாலை ஆறு மணி வரை காத்திருந்த தொழிலாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிற்சங்கங்களான அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் ஏஐடியுசி சிஐடியு தலைமையிலான போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் ATP, AITUC, CITU, MLF, INTUC, HMS, PTS, DMTSP, BMS, TMTUC, TTSF, உள்ளிட்ட 25 தொழிற்சங்கங்கள் ஈடுபட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.