நேபாள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்: மாயமான 63 பேரில் 7 இந்தியர்கள்!
நேபாளத்தில் கனமழை காரணமாக 63 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்துகளில் 7 இந்தியர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 2 பேருந்துகள் இன்று அதிகாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் 7 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய ஒரு பேருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்த ஏஞ்ஜெல் பேருந்து என்பதும், அதில் 24 பயணிகள் இருந்ததாகவும், மற்றொரு பேருந்து காத்மாண்டுவிலிருந்து ரௌதஹத் அருகே கௌர் பகுதிக்கு வந்துகொண்டிருந்ததாகவும், இதில் 41 பயணிகள் இருந்ததாகவும் ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
காத்மாண்டு வந்துகொண்டிருந்த பேருந்தில் இருந்த 21 பயணிகளில் ஏழு பேர் இந்தியர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்வதற்கு முன்பே, அதிலிருந்து குதித்து மூன்று பயணிகள் காயத்துடன் உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த இந்தியர்களில் சந்தோஷ் தாகூர், சுரேந்திர சாஹ், அதித் மியான், சுனில், ஷானவாஸ் ஆலம், அன்சாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொரு இந்தியரின் அடையாளம் தெரியவரவில்லை.
மத்திய நேபாளத்தில், ஓடிக்கொண்டிருக்கும் திரிசூலி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், அதன் கரைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அருகிலிருந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நேரிட்டது.
விபத்து நேரிட்ட இடத்தில் மண் சரிவுகளை அகற்றும் பணியும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில், படகுகளில் சென்று பயணிகளை தேடும் பணியிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும், சாலை முழுக்க நிலச்சரிவினால் மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.