பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர்!
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தொழிலாளர்களுடனான அரசின் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று (ஜன. 8) நடந்த இறுதிகட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல காத்திருக்கும் பொதுமக்களும் கலக்கமடைந்திருக்கின்றனர்.
இந்நிலையில் பேருந்துகள் இயக்கம் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போக்குவரத்துத்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான், காவல்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜன.12 முதல் 14-ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2000 முதல் 6300 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 4706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே மொத்தம் சென்னையில் இருந்து இந்த 3 நாட்களுக்கு 11006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 8478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆகமொத்தம் 19484 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்த பேருந்து நிறுத்தங்கள் ஒவ்வொன்றில் இருந்தும், குறிப்பாக பெங்களூரு செல்லுகின்ற SETC அதேபோல ஈசிஆர் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்கின்ற பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். இவற்றை தவிர NH45 வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தை தவிர வேறு எந்த பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படாது.
அதே போல் பொங்கல் திருநாள் முடிந்து மற்ற ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக 16 முதல் 18 வரை தினசரி இயங்கும் 2100 பேருந்துகளுடன் 4830 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மொத்தம் 17809 பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு மையங்கள் கோயம்பேட்டில் 5 மையமும், தாம்பரத்தில் 1 மையமும், கிளாம்பாக்கத்தில் 5 மையங்களும் உள்ளன. இதுதவிர இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.
போக்குவரத்து தொழிற்சங்களின் வேலைநிறுத்தம் அரசியல் உள் நோக்கம் கொண்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசிய காணொலியைக் காண: