வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு!
வியட்நாம் தலைநகர் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில் பேருந்து ஹா டின் மாகாணத்தில் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையை விட்டு விலகி, போக்குவரத்து அடையாள பலகைகளில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதனை தொடர்ந்து காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியட்நாமில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.