அரிக்கொம்பன் பாதையில் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட ‘புல்லட் ராஜா’!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு, காப்பி காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் ஒரு மாதமாக CT 16 கோட்டமலை பாஸ்கர் என்று வனத்துறையினரால் பெயரிடப்பட்ட புல்லட் ராஜா என்ற காட்டு யானை, 48க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து, சேதபடுத்தி, வீட்டில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் மக்களை அச்சுறுத்தி வந்தது.
காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதை கட்டுப்படுத்த, பல்வேறு யுக்திகளை வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர். இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், யானையை விரட்டும் பணியாளர்கள், முதுமலையில் யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் என 75க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நான்கு குழுக்களாக பிரிந்து யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதற்காக, அதிநவீன ட்ரோன் கேமராக்கள் மற்றும் இரவு நேரங்களில் யானை நடமாட்டத்தை துல்லியமாக கண்டறியும் தெர்மல் ட்ரோன் கேமரா (Thermal drone camera) மூலமும், பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன், புல்லட் யானை ஊருக்குள் நுழைவதை தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து, தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டிள்ள வனப்பகுதிகளில் போக்குக்காட்டி வந்த CT 16 என்ற புல்லட் ராஜா காட்டு யானையை, கடந்த டிச.27ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியோடு வன கால்நடை மருத்துவர்கள், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
முதலில் பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் கொண்டு செல்லப்பட்ட யானையை, பிறகு தென்காசி மாவட்ட வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்த புல்லட் ராஜா, நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் அகத்தியர் மலை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பலத்த காவல்துறை பாதுகாப்போடு கொண்டுவரப்பட்ட புல்லட் ராஜா மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக கோதை ஆறு வனப்பகுதியில் விடப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் இளையராஜா மற்றும் களக்காடு வன கோட்டத்தின் இயக்குனர்கள் நேரடி பார்வையில் யானை கோதையாறு வனத்தில் விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளா மற்றும் தமிழகம் பகுதிகளில் அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு பின்பு இதே கோதையாறு வன பகுதியில் விடப்பட்டது குறிப்பிடதக்கது.