“பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு” - காகத்தை கண்டு அஞ்சும் காட்டு யானைகள்... வீடியோ வைரல்!
கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி வரும் நிலையில், கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தண்ணீர் தேடி அலைந்து திரியும் வன விலங்குகளுக்கு, வனத் துறையினர் வனப் பகுதிகளுக்குள் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தண்ணீர் குடிக்கும் காட்டு யானைகள் காகத்தை பார்த்து பயப்படும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தண்ணீருக்காக குட்டியுடன் வந்த மூன்று காட்டு யானைகள் கோவை தடாகம் பகுதியில் உள்ள, பொன்னூத்து அம்மன் கோயில் அருகே வனத் துறையினர் வைத்து இருந்த தண்ணீர் தொட்டியில் தாகம் தீர்க்க தண்ணீர் அருந்தி கொண்டிருந்தன.
அப்பொழுது அங்கு வந்த ஒரு காகம், தொட்டியின் மேல் அமர்ந்தது. இதைக் கண்டு அச்சமடைந்த யானைகள் பின் வாங்கின. அந்தக் காட்சிகளை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து இருந்தார். அந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரிய அளவில் உருவம் கொண்ட யானையைக் கண்டு வன விலங்குகளும், மனிதர்களும் அஞ்சுகின்ற நிலையில், காகத்தைக் கண்டு யானைகள் அஞ்சிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.