இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? 2024 பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?
மக்களவை தேர்தல் நடக்கும் ஆண்டில், பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் என்பது தற்காலிக பட்ஜெட் ஆகும். இடைக்கால பட்ஜெட் பொதுவாக மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்திற்கான நிதித் தேவைக்காக தாக்கல் செய்யப்படுகிறது.
நிதியாண்டு என்றால் என்ன?
ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 நிதியாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முழு நிதியாண்டுக்கு பதிலாக, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
2024 பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் அமர்வு ஜனவரி 31 ஆம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக, நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் இதுவரை 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளர்.
எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்பு :
- இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் முக்கியமாக நிதிப்பற்றாக்குறையை குறைப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தும் எனத் தெரிகிறது.
- உள்கட்டமைப்பிற்கான செலவினங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதன்மையாக அறிவிப்புக்கள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், விவசாயிகள், பெண்களின் நலன்களுக்கான சில நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் HRA விரிவாக்கம், கட்டுமானப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி குறைப்பு, TCS வரிக்கு விலக்கு, IT/ITeS சேவைகளின் பூஜ்ஜிய மதிப்பீடு உள்ளிட்டவைக்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.