பட்ஜெட் கூட்டத்தொடர் 2024-25: பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக காணலாம்.
மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன்முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் வினாத்தாள் கசிவு தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய கல்வி அமைச்சரை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பினர்.
நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை(ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை அவர் இன்று தாக்கல் செய்தார். நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் :
- 2023ல் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருந்தது. உலகளாவிய பொருளாதார செயல்திறன் நிச்சயமற்ற நிலையில் இருந்தபோதிலும், 2024ம் நிதியாண்டில் இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சி இயக்கிகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தன.
- உலகளாவிய பிரச்னைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் சீரற்ற பருவமழை ஆகியவற்றால் பணவீக்கம் தூண்டப்பட்டபோதிலும், நிர்வாக மற்றும் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.
- இந்தியாவின் பொருளாதாரம் 6.5% முதல் 7% வரை வளர்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
- 2023-ம் நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் 2024-ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாகக் குறையும்.
- உலகளாவிய அளவில் நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலை ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
- நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகிறது, அதேபோல தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன.
- புவிசார் அரசியல் மோதல்களின் அதிகரிப்பு மற்றும் அதன் தாக்கம் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை நிலைப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
- மோசமான காலநிலையால் உணவுப் பொருட்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டு அதன்மூலம் விலைவாசி உயர்ந்துள்ளது.
- இந்திய பங்குச் சந்தையின் சந்தை மூலதனம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் சந்தை மூலதனம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.