பட்ஜெட் ரூ.5 கோடி… வசூல் ரூ.100+ கோடி... சாதனை படைக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’
பிப்ரவரி 22-ம் தேதி வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 12 நாட்களில் 100 கோடி வசூலை மின்னல் வேகத்தில் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
தென்னிந்திய சினிமாக்களில் மலையாள சினிமா ஒரு தனி ரகம் தான். அதிகமான ஆக்ஷன், ஃபேண்டஸி எதுவும் இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒத்திருக்கும் மலையாள சினிமாக் கதைகள் மொழிகளைத் தாண்டியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி வெளியான நிலையில் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
கேரளாவின் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர், குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை. சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் இடம் பெறும் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ பாடலுக்கு இப்போதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படம் வெளியாகி 10 நாட்களே ஆன நிலையில், கடந்த வார இறுதி நாட்களில் கொடைக்கானல் குணா குகைக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படக்குழுவை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் படக்குழுவை பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ஒரே நாளில் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் டப்பிங் இல்லாமல் படம் திரையிடப்பட்டாலும், பல்வேறு திரையரங்குகளில் ஏராளமான காட்சிகள் ஹவுஸ்புல் ஆக ஓடுகின்றன. பிப்ரவரி 22-ம் தேதி வெளியான இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 25 கோடி வசூல் செய்தது. அத்துடன் நேற்றுடன் (மார்ச் 4) 12 நாட்கள் ஆனநிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இதற்கு முன் புலிமுருகன், லூசிஃபர், 2018 உள்ளிட்ட படங்கள் தான் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தன. அவற்றில், 2018 திரைப்படம் ரூ.177 கோடிகளுடன் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமாக உள்ளது. இப்போது மஞ்சும்மல் பாய்ஸ் அந்த சாதனையில் தனது பார்வையை பதித்துள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நேற்று (மார்ச் 4) ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடி வசூலித்துள்ளது என்றால் இந்த படம் எந்த ரேஞ்சில் வசூல் செய்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘2018’ திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் ரூ.100 கோடி வசூலை குவித்தது. இதற்கு முன்னதாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ திரைப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.