For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பையும், விமர்சனத்தையும் இங்கு காண்போம்.
05:32 PM Feb 01, 2025 IST | Web Editor
மத்திய பட்ஜெட் 2025 26   தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும்  விமர்சனமும்
Advertisement

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். 8வது முறையாக இன்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

Advertisement

பாஜக ஆளும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும் வஞ்சிக்கப்பட்டுள்ளன என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மத்திய பட்ஜெட் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கு காண்போம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்;

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும், மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது. வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பாஜகவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.

எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி;

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதமர் மோடியின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி;

பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு – செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. இது ஒரு மாயாஜால அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாராயணசாமி;

மகாலட்சுமியின் ஆசிர்வாதத்தை பட்ஜெட் பெற்றிருக்கும் என பிரதமர் கூறியிருந்தார்; ஆனால் மகாலட்சுமியின் ஆசிர்வாதம் 1% மட்டுமே; 99% ஆசிர்வாதமில்லை.

பாமக நிறுவனர் ராமதாஸ்;

வேளாண் உற்பத்திப் பொருட்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். இதை வலியுறுத்தி உழவர்கள் போராடி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்;

வருமானவரி வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப் பட்டதில் மகிழ்ச்சி: தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்;

ஏழை, எளிய மக்களுக்கு நம்பிக்கை தரும் பட்ஜெட்: தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 12 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது குடிமக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்;

இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகப்படியாக வேலை வாய்ப்புகளுக்கான எந்த ஒரு அறிவிப்பு திட்டம் இல்லை, மேலும் விலைவாசி உயர்வு குறைப்பதைப் பற்றிய அறிவிப்பும் இல்லை, இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி (TOLLGATE) ரத்து அறிவிப்பு இல்லாதது, இந்தியாவின் பழமை வாய்ந்த தமிழ் மொழியை இன்னும் ஊக்கப்படுத்துவதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கவில்லை, மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தமிழகத்தில் உள்கட்டமைப்பு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இந்த பட்ஜெட் "யானைப் பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம்;

இந்த முறை தமிழ்நாட்டிற்கு திருக்குறள் மட்டுமே கிடைத்துள்ளது; எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்கள் புறக்கணிப்பு; மதுரை எய்ம்ஸ், மெட்ரோ 2 என தமிழ்நாட்டிற்கான எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை;

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை அதிகரித்து, வேலை வாய்ப்பை பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற நோக்கம் கொண்டதாக இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கை மத்திய அரசுக்கானதாக இல்லாமல் பிஹார் மாநிலத்திற்காக மட்டுமே இருப்பதைப் போல் அமைந்திருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகும். மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு கானல் நீராகவே அமைந்துள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ;

மத்திய நிதி நிலை அறிக்கை ஒட்டு மொத்தமாக ஏமாற்றத்தையே தருகிறது; உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் உரிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது; வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான செயல்திட்டங்கள் இல்லை.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை;

ஒட்டுமொத்தமாக, அனைத்துத் தரப்பு மக்களுக்குமான, தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய, பிரதமர் நரேந்திர மோடியின் கனவான, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய மிகச் சிறந்த பட்ஜெட்டை நாட்டுக்கு வழங்கியிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு பாஜக சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags :
Advertisement