முன்விரோதம் காரணமாக குடிநீரில் கழிவை கலந்த கொடூரம் - திருவொற்றியூரில் அதிர்ச்சி!
திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக அண்டை வீட்டு நபர், குடிநீரில் இரண்டு ஆண்டுகளாக மலம் மற்றும் சிறுநீரை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் கடற்கரை சாலை கல்யாண செட்டி நகரை சேர்ந்தவர்கள் மோகன், சங்கீதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் குத்துச் சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர். இதனிடையே கடந்த ஆறு மாத காலமாகவே இவர்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வந்துள்ளன. வீட்டில் சமைத்த சத்தான உணவுகளை உட்கொண்ட போதும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் தொற்றுகள் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் நிலை அடிக்கடி வந்துள்ளது.
வயிறு சம்பந்தமான பிரச்னைகளும் மகள்களுக்கு அடிக்கடி ஏற்படுவதால் குழப்பத்தில் இருந்த சங்கீதா வீட்டில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில், பக்கத்து வீட்டை சேர்ந்த எல்லப்பன் என்ற நபர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டுக்குள் வந்து, பக்கெட்டை எடுத்துச் சென்று வெளியில் வைத்து மலத்தையும் சிறுநீரையும் கலந்து எடுத்து வந்து குடிநீர் தொட்டியில் ஊற்றுவது தெரியவந்தது.
மாநகராட்சி குடிநீரை பயன்படுத்தும் சங்கீதா இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரை டிரம்களில் பிடித்து வைத்திருக்கும் நிலையில், அந்த குடிநீரில் மலத்தையும் சிறுநீரையும் கலப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே வெண்மை நிறமாக பிடித்து வைக்கும் தண்ணீர் மஞ்சள் நிறமாகவும், துர்நாற்றம் வீசி வந்ததாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் சங்கீதா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எல்லப்பனின் தந்தைக்கும், மோகனின் தந்தைக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனிடையே, எல்லப்பனின் தந்தை விபத்தில் இறந்துள்ளார். ஆனால், அதற்கு மோகன் குடும்பத்தினர் தான் காரணம் என நினைத்து, இக்கொடூர செயலை எல்லப்பன் செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.