திருப்பூர் அருகே அண்ணனை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய தம்பி கைது!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கருவலூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என இவரது மகன் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கோவிந்தசாமியின் தம்பி முறையில் உள்ள சித்தப்பா மகன் ரமேஷ் அவ்வப்போது தகராறில் ஈடுப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போலிசார் ரமேஷை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
ரமேஷ்க்கும், அவரது சகோதரிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனை தீர்த்து வைக்குமாறு கோவிந்தசாமியிடம் கேட்ட பொழுது கோவிந்தசாமி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் கருவலூர் அருகே இருக்கும் தோட்டத்து பகுதியில் வைத்து அவரை கீழே தள்ளியதாகவும் அப்பொழுது கோவிந்தசாமி உயிரிழந்ததாகவும், பின்னர் என்ன செய்வது என தெரியாமல் அருகில் இருந்த ஆள் அரவமற்ற கோழிப்பண்ணை அருகே வைத்து கோவிந்தசாமியின் உடலை துண்டு துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி குன்னத்தூர் அருகே இருக்கும் குளத்தில் வீசியதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், குளத்தில் சென்று பார்த்த பொழுது மூட்டைகளை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் இன்று துர்நாற்றத்துடன் மூட்டை மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பெரிய சாக்கு மூட்டையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அதிலிருந்தது கோவிந்தசாமியின் உடல் பாகங்கள் என தெரியவந்துள்ளது. மேலும் அவரது தலை, கை உள்ளிட்ட பாகங்கள் கிடைக்காத நிலையில் அவற்றையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிடைத்த உடல் உறுப்புகளை குளக்கரையில் வைத்து பிரேத பரிசோதனை செய்தனர்.