#Bengaluru-க்கு ரகசியமாக வந்தாரா பிரிட்டன் மன்னர் சார்லஸ்? காரணம் என்ன?
பிரிட்டன் மன்னர் சார்லஸ் தனது மனைவியுடன் பெங்களூருக்கு சிகிச்சை பெற ரகசியமாக வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, சிகிச்சைக்காக பெங்களூரு வந்துள்ளனர். கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி பெங்களூரு வந்த இந்த அரச தம்பதிகள் வைட்ஃபீல்டில் உள்ள சவுக்யா சர்வதேச சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தனிப்பட்ட பயணம் என்பதால், அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த வெல்னஸ் மையத்தில் அரச தம்பதியினருக்கு யோகா மற்றும் புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அங்கு தம்பதி வாக்கிங் மற்றும் இயற்கை வேளாண்மையிலும், கால்நடை பண்ணைகளிலும் நேரத்தை செலவழிக்கிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மருத்துவ மையத்தில் அரச தம்பதிக்கு காலையில் யோக பயிற்சி, காலை உணவு பிறகு உடல்நல மேம்பாட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், பிறகு மதிய உணவு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஓய்வுக்குப் பிறகு, அரச தம்பதி இரண்டாம் சுற்றில் சில சிகிச்சைகள் பெறுவதாகவும், தியானம், உள்ளிட்டவற்றை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு மருத்துவ மைய வளாகத்துக்குள் ஒரு சிறு நடைப்பயிற்சி செய்வதாகவும், அங்குள்ள பசுமைப் பண்ணை மற்றும் கால்நடைப் பண்ணைகளை அரச தம்பதி பார்த்து மகிழ்வதாகவும் கூறப்படுகிறது. அரச தம்பதியின் வருகையை முன்னிட்டு, மருத்துவ மையத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் பிரட்டனின் புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்றுக்கொண்ட பிறகு இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது இது முதல் முறை.