For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஷ்மீர் விவகாரம் - பிரிட்டன் தேர்தல் வெற்றிக்கு பிறகு தங்களது நிலைப்பாட்டை மாற்றிய தொழிலாளர் கட்சி!

01:44 PM Jul 06, 2024 IST | Web Editor
காஷ்மீர் விவகாரம்   பிரிட்டன் தேர்தல் வெற்றிக்கு பிறகு தங்களது நிலைப்பாட்டை மாற்றிய தொழிலாளர் கட்சி
Advertisement

காஷ்மீர் விவகாரத்தில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சி இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்த நிலையில் தற்போது தேர்தல் வெற்றிக்கு பிறகு அக்கட்சியின் நிலைப்பாட்டை மாற்றி உள்ளது

Advertisement

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்தார்.  இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இதனால் நேற்று முன்தினம் பிரிட்டனில் ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும், தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதின.

நேற்று முன்தினம் (ஜூலை 4) காலை தொடங்கிய தேர்தல் இரவு 7 மணிக்கு சுமூகமாக முடிந்தது. ஜூலை 5 காலை முதல் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றது. இதன்படி ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே  பெற்றது. ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது.  அதே வேளையில், தொழிலாளர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார்.  பிரிட்டன் நாட்டில் ஆட்சியைப் பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரிதளவில் நல்லுறவு இல்லை. எனவே, இந்தியா பிரிட்டன் இடையேயான நல்லுறவை மீட்டு எடுப்பதே கெய்ர் ஸ்டார்மருக்கு முதல் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விவகாரம் என்பதே பல நாடுகளின் நிலைப்பாடு. பிரிட்டன் அரசின் நிலைப்பாடும் இதுவாகத்தான் இருந்தது.  ஆனால், தொழிலாளர் கட்சி அப்படி இல்லை கடந்த காலங்களில் காஷ்மீர் பிரச்னை குறித்து இந்தியாவை விமர்சித்திருந்தது.  இப்போது தொழிலாளர் கட்சித் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் இருக்கிறார்.

ஆனால், இவருக்கு முன்பு ஜெர்மி கார்பின் தலைவராக இருந்த போது, கடந்த 2019ல் அவசர மசோதா ஒன்றைக் கட்சிக்குள் கொண்டு வந்தது.  அதில் காஷ்மீரில் சர்வதேச பார்வையாளர்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், காஷ்மீர் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையேயான அணு ஆயுத மோதலை தடுக்கவும் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்கவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களை ஜெர்மி கார்பின் சந்தித்து பேசுவார் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டு இருந்தது.  இதற்கு இந்தியா மிக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.  அரசியலுக்காகவே தொழிலாளர் கட்சி இப்படிச் செய்வதாகவும் சாடியது.  இதுவே இரு தரப்பிற்கும் உள்ள சிக்கலாக இருந்தது.

ஆனால் பிரிட்டனில் பிரதமராக பதவியேற்க உள்ள கீர் ஸ்டார்மர், தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே இந்தியா உடன் வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.  பிரிட்டனில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நடந்த கூட்டத்தில்​​ காஷ்மீர் என்பது ஒரு உள்நாட்டுப் பிரச்னை என்றும், இந்தியாவும் பாகிஸ்தானும் அதைத் தீர்க்கும் என்றும் ஸ்டார்மர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் உள்ள எந்தவொரு சிக்கலையும் இந்திய நாடாளுமன்றம் கவனித்துக் கொள்ளும். காஷ்மீர் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டிய இருதரப்பு பிரச்னை" என்று அவர் தெரிவித்தார்.  இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் தொழிலாளர் கட்சியின் நிலைபாடு மாறி உள்ளது என்பது உறுதியாகியது.

Tags :
Advertisement