"போரை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து, பிரான்ஸ் இணைந்து பணியாற்றும்" - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் உறுதி !
ரஷியா - உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஒரு சமரச திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபருக்கு, அமெரிக்கா அழைப்பு விடுத்தது.
இதையடுத்து வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இரு தலைவர்களும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
இதனால் பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி பாதியில் வெளியேறினார். இதையடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து உடனடியாக வெளியேறும்படி ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவினருக்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற ஜெலன்ஸ்கி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகிலுள்ள 200 ஆண்டுகள் பழமையான மாளிகையான லான்காஸ்டர் ஹவுஸில் இங்கிலாந்து பிரதமர் கெய்ரை சந்தித்தார்.
அப்போது இங்கிலாந்து தலைவர் கெய்ர் உங்களுக்கு முழு ஆதரவு உள்ளது. நாங்கள் உக்ரைனுடன், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் துணை நிற்போம் என்று கூறினார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
"ரஷிய-உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதில் உக்ரைனுடன் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து பணியாற்றும். உக்ரைனில் அமைதி திரும்ப அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். அதே நேரம் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் மிகவும் முக்கியம்" என்று கூறினார்.
பின்னர் நடந்த முக்கிய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதனிடையே ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக லண்டனில் ஐரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனை கூட்டத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 2) நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்பெயின், கனடா, பின்லாந்து, சுவீடன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர், "உக்ரைனுக்கு நல்ல பலனை பெற்றுத்தருவது நமது கடமையாகும். அது இங்குள்ள ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்புக்கும் இன்றியமையாதது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உக்ரைனுடன் இங்கிலாந்தும், பிரான்சும் இணைந்து பணியாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.