“ஆறரை கோடி வாக்காளர்களிடம் அரசின் சாதனைகளை கொண்டு சேருங்கள்!” கோவையில் திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
கோவையில் கட்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆறரை கோடி வாக்காளர்களிடம் அரசின் சாதனைகளை கொண்டு சேருங்கள் என கட்சி தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிகள் குறித்து கோவையில் இன்று (05.11.2024) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வலியுறுத்தி கூறினார்.
திமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாவது:
எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு கீழாக உள்ள திமுகவினருக்கு நீங்கள்தான் பலமாக இருக்க வேண்டும். பாலமாகவும் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு கொள்கைகளை விதைப்பது மிக முக்கியம். அவர்கள்தான் எதிர்காலத்திற்கான விதைகள். பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களை நடத்துங்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. நிர்வாகிகள் அவரவர் குடும்பத்திற்கும் நேரத்தை செலவிடுங்கள். தொழில் செய்பவர்களாக இருந்தால் அதற்கும் கவனம் செலுத்துங்கள். அதே சமயம் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாக கட்சி பணிக்கு ஒதுக்குங்கள்.
நம்முடைய கட்சிக்கு உள்ள கட்டமைப்பு தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. நாம் நினைத்தால் எந்தச் செய்தியையும் நினைத்த நேரத்தில் ஆறரை கோடி வாக்காளர்களிடமும் கொண்டு சேர்த்துவிட முடியும். எனவே நம் சாதனைகளைக் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும்.