"பிரிஜ் பூஷன் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை; அதனால் அவர் மகனுக்கு சீட் வழங்கியது தவறில்லை" - நிர்மலா சீதாராமன் விளக்கம்!
"பிரிஜ் பூஷன் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை; அதனால் அவர் மகனுக்கு சீட் வழங்கியது தவறில்லை" என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது. தற்போது வரை இரண்டு கட்டங்கள் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் பாஜக எம்.பி. ப்ரிஜ் பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் அவரது மகன் கரண் பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில் பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தெரிவித்ததாவது..
"மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் நீங்கள் இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்கலாம்.
எத்தனை பேரின் பெற்றோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் வாய்ப்பு தருகின்றது. குற்றம் செய்து தண்டனை பெற்றவர்களின் பிள்ளைகள் கூட சீட் பெறுகிறார்கள். இங்கு பிரிஜ் பூஷனுக்கு எதிராக இதுவரை எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அவர் மகனுக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கியதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.