#BRICSSummit - ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு நடைபெறும் ரஷ்யாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு நிகழாண்டு ரஷ்யா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் இன்று மற்றும் நாளை (அக். 22, 23) நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபர் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து தலைவர்கள் கலந்துரையாட உள்ளனர். உலக நிலப்பரப்பில் சுமார் 30% மற்றும் உலக மக்கள்தொகையில் 45% உள்ளடக்கியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, புவிசார் அரசியலில் முன்னணி மேற்கத்திய நாடுகளின் ‘ஜி7’ கூட்டமைப்புக்கு போட்டியாகக் கருதப்படுகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக இன்று (அக். 22) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு ரஷ்யாவின் கசானுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய அதிபர் புதின் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கசானுக்கு இருநாள் பயணமாக செல்கிறேன். உலகளாவிய வளர்ச்சி, சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களை இணைப்பதை ஊக்குவித்தல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கலந்துரையாடி, பிரிக்ஸ் அமைப்புடனான நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா வழங்கும்.
கடந்தாண்டு புதிய உறுப்பினர்களை சேர்த்து பிரிக்ஸ் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்துகொண்டேன். தற்போது கசான் பயணமானது இந்தியாவுக்கு ரஷியாவுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும். பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.