தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை - அரும்பாக்கம் ஆர்கே பார்மாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை!
தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட அரும்பாக்கம் ஆர்கே பார்மாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சில தினங்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பகுதியில் ஒரு தனியார் மருந்து கடையில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மே 24ஆம் தேதி அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டதில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தாய்ப்பாலை இது போல் விற்பனை செய்யக்கூடாது எனவும், பாலை தானமாக வழங்கலாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர். அதை மீறியும் கடையின் உரிமையாளர் தாய்ப்பாலினை விற்பனை செய்து வந்ததன் எதிரொலியாக அந்த கடை மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆர் கே பார்மா என்ற தனியார் மருந்து நிறுவனத்தில் 2 வது தளத்தில் தாய்ப்பாலை பதப்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக அடைத்து விற்பனை செய்து வந்ததை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஒரு பெட்டியில் 50 மில்லி வீதம் மொத்தம் 300 மில்லி லிட்டர் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து அதனை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் பாட்டிலில் அடைத்து விற்கப்படக்கூடிய இந்தப் பாலுக்கு எந்தவித FSSI அனுமதியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல அந்த பாட்டிலில் தாய்ப்பால் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்ப்பாலை பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் பொதுமக்கள் மத்தியில் தவறான வழிகாட்டுதலை இவை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தனர்.