#BreakFailure 15 லட்சம் கார்களை திரும்பப் பெறப்போவதாக BMW நிறுவனம் அறிவிப்பு!
பிரபல பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் தங்களது தயாரிப்பில் உருவான சுமார் 15.3 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
கார் நிறுவனங்களின் முக்கியமானதாகவும் உயர்தர கார் பிரியர்களின் பட்டியலில் இடம்பெற்ற கார்தான் பிஎம்டபிள்யூ கார் வகைகள். இந்த காரை வாங்க பலரும் போட்டி போட்டிக் கொண்டிருக்கும் நிலையில் சுமார் 15 லட்சம் கார்களை திரும்பப் பெறப்போவதாக ஜெர்மானிய கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் கார் பிரேக்குகளில் உள்ள கோளாறு காரணமாக அதிகளவில் அந்நிறுவனத்திற்கு புகார் வந்ததாக சொல்லப்படுகிறது. கார் பிரேக் கோளாறால் பாதிக்கப்பட்ட வாகனங்கள் ஜூன் 2022 மற்றும் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. கார்களை திரும்பப் பெறும் இந்த முடிவினால் பி.எம்.டபிள்யூ. கார்கள் விற்பனை அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் (BMW X) மாடல்களான (X3 மற்றும் X4), X5 மற்றும் X7 சீரிஸ், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர், மினிகூப்பர் மற்றும் கண்ட்ரிமேன் ஆகிய கார்களும் இந்தப் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பிரேக் கோளாறு உள்ள சுமார் 15.3 லட்சம் கார்களில், 12 லட்சம் கார்கள் வாடிக்கையாளரிடம் உள்ளன. சுமார் 3,20,000 கார்கள் டீலர் ஸ்டாக்கில் உள்ளன. எனவே சீனாவில் சுமார் 3,70,000, அமெரிக்காவில் 2,70,000, ஜெர்மனியில் 1,50,000, கொரியாவில் 70,000 மற்றும் பிரான்சில் 60,000 உள்பட 15 லட்சம் கார்கள் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் அதன் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ.வின் இந்தத் திரும்பப் பெறும் முடிவால் நேற்று ( செவ்வாய் கிழமை) பிற்பகலில் பி.எம்.டபிள்யூ.வின் பங்குகள் 11%-க்கும் அதிகமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.