மூளைச்சாவு அடைந்த இளைஞர் - உறுப்புகளை தானம் செய்து 3பேருக்கு மறுவாழ்வு அளித்த குடும்பம்.!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானத்தால்,
மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகன் பரத்குமார்(19). இவர் கடந்த நவம்பர் 24ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மூளை செயலிழப்பு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து மருத்துவர்கள், அவரது குடும்பத்தினரிடம் உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்துரைத்தனர். அதனை புரிந்து கொண்ட குடும்பத்தினர், இறந்தவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சம்மதித்தனர். அதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, மருத்துவ குழுவினர் மூளைச்சாவு அடைந்தவரின் 2 சிறுநீரகங்கள் மற்றும் இருதயம் ஆகியவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்தனர். பின் இந்த உறுப்புகள் சென்னை மற்றும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த நபரின் சிறுநீரகங்கள் சிறப்பு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கு பொருத்தப்பட்டது. அதேபோல் நுரையீரல் மற்றும் இருதயம் ஆம்புலன்சு மூலம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
பரத்குமார் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம், 3 உயிர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.