குடல்வால் அறுவை சிகிச்சை செய்த சிறுவன் பலி... நடவடிக்கை எடுக்க கோரி மனு!
மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனையில் குடல்வால் (அப்பன்டிஸ்) அறுவை
சிகிச்சை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுவனின் விவகாரத்தில் உரிய விசாரணை செய்து மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை அருகே மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர்
பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் கிஷோர். ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கிஷோர் மிகுந்த வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனை அடுத்து கடந்த 29-ம் தேதி மயிலாடுதுறையில் உள்ள அருண்பிரியா மருத்துவமனையில் கிஷோருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கிஷோர் உயிரிழந்தார்.
ஆனால், கிஷோர் உயிரிழந்ததை கூறாமல், மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்ததாகவும், 12 வயது சிறுவனுக்கு வயதைக் கருத்தில் கொள்ளாமல் உடல் எடையை வைத்து அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தியதாகவும், தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்: மதுரை கொடிக்குளம் பள்ளிக்கு கூடுதலாக 91 சென்ட் நிலம் வழங்கிய ஆயி அம்மாள்!
சிறுவனின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (பிப்.05) அருண்பிரியா மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.
உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகவும், மாவட்ட ஆட்சியர் ஒருவரை மட்டுமே முழுமையாக நம்புவதாகவும் கிஷோரின் தந்தை பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.