மகளுடன் சேர்ந்து குளிர்பானம் அருந்தியதால் கடத்தப்பட்ட சிறுவன் - பரியேறும் பெருமாள் பட பாணியில் கொடூரம்!
உத்தர பிரதேசத்தில் தனது மகளுடன் சேர்ந்து குளிர்பானம் அருந்திய இளைஞரை கடத்திச் சென்று கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தனது மகளுடன் சேர்ந்து ஒரு கடையில் குளிர்பானம் அருந்திய சிறுவனை வழக்கறிஞர் ஒருவர் கடத்திச்சென்று கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 50 வயது வழக்கறிஞர் மற்றும் அவரின் மூத்த சகோதரரையும் காவல் துறை கைது செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலுள்ள பித்தூர் பகுதியில் 17வயது சிறுவன் ஒருவன் தனது வகுப்புத் தோழியான 14 வயது சிறுமியுடன் கடையில் குளிர்பானம் அருந்தியுள்ளார். இதனைக் கண்ட சிறுமியின் தந்தையும் வழக்கறிஞருமான பிரஜ் நாராயண் நிஷாத் தனது சகோதரர் தேஜ் நாராயண் நிஷாத் உடன் சேர்ந்து சிறுவனை பண்ணை வீட்டிற்கு காரில் கடத்தியுள்ளார். அங்கு சிறுவனின் கை, கால்களை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் சிறுவன் பலத்த காயமடைந்தார்.
மேலும் சிறுவனின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சிறுவனைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகே வழக்கறிஞர் சிறுவனைக் கடத்தி துன்புறுத்தியது பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறுவன் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பின்குத்பூர் பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் காவல் துறையினர் சிறுவனை காயங்களுடன் மீட்டனர். சிறுவனைத் தாக்கியதில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால், தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன்பின்னர் வழக்கறிஞர் மற்றும் அவரின் சகோதரரையும் காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால் இச்சம்பவத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குறுக்கிட்டு காவல் நிலையத்திற்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் பிரஜ் நாராயண் மகளிடம் கட்டாயப்படுத்தி தேநீர் கடையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுவன் மீது குற்றம் சாட்ட்டப்பட்டு சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.