Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மக்களவை தேர்தலில் கட்சி போட்டியிடும்... நான் போட்டியிடப் போவதில்லை!” - திருச்சியில் சீமான் பேட்டி

02:08 PM Feb 25, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் :

"நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். நான் போட்டியிடப் போவதில்லை. சாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் அதை செய்கிறோம். தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம்.

இதையும் படியுங்கள் : அனல் பறக்கும் தேர்தல் களம் – மார்ச் 1ல் அதிமுக நட்சத்திர பேச்சாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!

நாட்டை அரை நூற்றாண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார். இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? தேர்தல் வரும் போது அனைவர் மீதும் பாசம் வருகிறது. இவை அனைத்தும் நாடகங்கள். வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழ்நாடு மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க மு.க.ஸ்டாலின் புறப்பட்டுவிட்டார்.

காங்கிரஸ் கட்சி இனி இருக்காது. அதனால் பாஜகவிற்கு செல்லலாம் என்ற நினைப்பில் விஜயதரணி அங்கு சென்று இருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு மூன்று முறை எம்.எல்.ஏ. சீட்டு வழங்கியது. ஆனால் பாஜகவை பொறுத்தவரை, அக்கட்சியில் சேரும் அன்று ஏதாவது செய்வார்கள், அதன்பின் எந்த செய்தியும் வராது. வாக்கு இயந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும் போது முடிவு மக்கள் கையில் இருக்காது.

பாஜகவினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொருக் கையில் வாக்கு பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள். கூட்டணியில் சேர அழைப்பு வரும். என்னிடம் அதை ரகசியமாக பேசுவார்கள். நானும் அதை ரகசியமாக வைத்திருப்பேன். அதை வெளிப்படையாக கூறுவது மாண்பாக இருக்காது.

வாக்கு இயந்திரத்தை நமக்கு தயாரித்து தருவது ஜப்பான். ஆனால் அந்த நாட்டு தேர்தலிலேயே அதை பயன்படுத்துவதில்லை. நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றில் விடைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முடியும் என கூறுகிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வாக்கு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களே தெரிவிக்கிறார்கள்”

இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Tags :
criticized BJPElection2024Naam Tamilar PartySeemanspeech
Advertisement
Next Article