TVS XL வாங்குனது ரூ.20,000… பார்ட்டி வச்சது ரூ.40,000… கொஞ்சம் ஓவரா தான் போறீங்க் பாஸ்..!
மத்தியப் பிரதேசத்தில் டீக்கடை நடத்தி வரும் நபர், தான் புதிய TVS XL பைக் வாங்கியது மற்றும் அதற்கான நிகழ்ச்சி என மொத்தமாக ரூ.60,000 செலவு செய்து பிரம்மிக்க வைத்துள்ளார்.
புதிய வாகனம் வாங்குவது அனைவரின் வாழ்விலும் தவிர்க்கமுடியாத கனவாகவும், ஆசையாகவும் இருக்கிறது. வாகனத்தின் பெயரும், விலையும் வேறுப்படுமே தவிர அனைவருக்கும் ஏதாவது ஒரு கனவு வாகனம் இருக்கும். அந்த கனவை நினைவாக்கும்போது, பலர் பல விதமாக அதனை கொண்டாடுவர். ஒரு சிலர் குடும்பத்துடன் கேக் வெட்டியும், சிலர் பட்டாசுகள் வெடிக்க, மேள தாளங்களுடன் வாகனத்தை டெலிவிரி பெற்று சென்றுள்ள பல நிகழ்வுகளை பார்த்திருப்போம். அந்த வகையில், ஒருவர் தனது புதிய டிவிஎஸ் எக்ஸ்.எல் (TVS XL) பைக்கை வெகு விமர்சையாக வரவேற்றுள்ளார். புதிய TVS XL பைக் மற்றும் அதற்கான நிகழ்ச்சி என மொத்தமாக ரூ.60,000 செலவு செய்து பிரம்மிக்க வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் சிவ்புரி நகரை சேர்ந்த முராரி லா குஷ்வாஹா டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் TVS XL பைக்கை டிஜே பார்ட்டி மற்றும் ஆடல், பாடல்களுடன் டெலிவரி பெற்றுள்ளார். முக்கியமாக, தனது TVS XL பைக்கை ஜேசிபி வாகனத்தின் மூலம் மேலே தூக்கி அனைவருக்கும் காட்டிக் கொண்டே எடுத்து வந்துள்ளார். முராரி TVS XL பைக் வாங்கும் நிகழ்வு ஒரு சிறிய விழா போல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேலும், முராரி TVS XL பைக்கை முழு தொகை கொடுத்து வாங்கவில்லையாம். ரூ.20,000 முன் தொகை மட்டுமே கொடுத்து வாங்கியுள்ளாராம். ஆனால், பைக் அறிமுக நிகழ்ச்சிகாக மட்டும் ஏறக்குறைய ரூ.40,000 வரை செலவு செய்துள்ளாராம். மீதி பணத்தை மாதத்தவணை முறையில் செலுத்த வேண்டியிருக்கும். முராரி தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இவ்வாறு செலவு செய்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாக கூறியுள்ளார். முராரியின் இந்த செயல் புதுமையானதாகவும் இருந்தாலும் போலீசாருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடத்தில் இரைச்சலை ஏற்படுத்தியதாக முராரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட டிஜே மியுசிகல் பொருட்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய பைக்கை வாங்கியிருப்பதை கொண்டாடியது ஒன்றும் குற்றமில்லை. ஆனால், அதனை மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் செய்திருக்க வேண்டும். முராரி லா குஷ்வாஹா இவ்வாறு விசித்திரமான செயல்களில் ஈடுப்படுவது இது முதல்முறை அல்ல. 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.12,500 மொபைல் வாங்கியதற்காக ரூ.25,000ஐ செலவு செய்திருந்தார்.