எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை - யார் இந்த சுமன் குமாரி?
BSF படையில் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக இமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுமன் குமாரி தேர்ச்சி பெற்றுள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக சுமன் குமாரி என்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் இந்தூரில் உள்ள மத்திய ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் பள்ளியில் (CSWT) எட்டு வார துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்துள்ளார். மேலும் இவர் பயிற்சியாளர் தரம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, BSF CSWT இந்தூர் பிரிவு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “BSF உண்மையிலேயே உள்ளடங்கிய படையாக மாறி வருகிறது. இங்கு பெண்கள் எல்லா இடங்களிலும் வேகமாக முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் ஒரு படியாக, கடுமையான பயிற்சிக்குப் பிறகு, BSF முதல் பெண் துப்பாக்கி சுடும் வீரரைப் பெற்றுள்ளது" என பதிவிட்டுள்ளது.
BSF is truly becoming an inclusive Force where #ladies are taking rapid strides everywhere. In a step in this direction, after rigorous training, #BSF has got the First #Mahila Sniper. pic.twitter.com/S80CUo0eKz
— BSF CSWT INDORE (@BSF_CSWT) March 2, 2024
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி ஒரு எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். அவரது அம்மா வீட்டு வேலை செய்கிறார். அவர் 2021-ம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையில் இணைந்தார்.
சுமன் குமாரி, பஞ்சாபில் தனது படைப்பிரிவுடன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எல்லைக்கு அப்பால் இருந்து துப்பாக்கி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அதன்பிறகு, துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு அவர் முன்வந்ததாக கூறியுள்ளார். சுமனின் மன உறுதியைப் பார்த்து, துப்பாக்கி சுடுதல் பற்றிய படிப்பை மேற்கொள்ள அவருடைய மேலதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். சுமன் குமாரி, ஆயுதமின்றி போரிடும் குழுவிலும் தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் மற்றும் மன வலிமை தேவைப்படும் துப்பாக்கி சுடும் பாடத்திட்டத்தில் சுமன் குமாரி சிறந்து விளங்கியது குறித்து அவரது பயிற்சியாளர் கூறியதாவது, “துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு நிறைய உடல் மற்றும் மன வலிமை தேவை. இந்த ஆண்டு பயிற்சியில் கவனம் செலுத்தி மேம்படுத்தியுள்ளோம். பெரும்பாலான ஆண் பயிற்சியாளர்கள் இந்தப் பயிற்சியைத் தக்கவைத்துக்கொள்வது கடினம் என கூறினர் மற்றும் சிலர் படிப்பை முயற்சி செய்யக்கூட இல்லை.
ஆனால் சுமன் படிப்பின் போது பெரும்பாலான நிகழ்வுகளில் முன்னணியில் இருந்தார் என்பதை நான் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். அவருடைய கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் ஆகியவை அவரை தனித்து நிற்கச் செய்கின்றன" என்று தெரிவித்தார்.