பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி - முதல் போட்டியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அறிவிப்பு!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிக்கான முதல் போட்டியில் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் விளையாட உள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் அணிகள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும்.
இதையும் படியுங்கள் : பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளியானது நயன்தாராவின் திருமண ஆவணப்படம்!
இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் | போட்டிக்கு மட்டும் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் ஷர்மாவுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளதால், 22ம் தேதி தொடங்க உள்ள முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.