பெங்களூருவில் மூன்று உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பெங்களூரில் உள்ள மூன்று உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் ஒரு நட்சத்திர உணவகம் உள்பட மூன்று உணவகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட உணவக உரிமையாளர்கள் காவல்துறைக்கும், உள்ளூர் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து மூன்று உணவகங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அந்த மின்னஞ்சலில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் மேலும் வங்கிகளில் குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர் என பெங்களூரு துணை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி பெங்களூருவின் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தில் உள்ள புகழ்பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் மதிய உணவு நேரத்தில் குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்து 9 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.