"பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் " - சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பேட்டி.!
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம், அவை புரளிதான் என சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு அண்ணா நகர் டிவிஎஸ் பிரதான சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் திரண்டனர். இதனையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
மேலும், சென்னை பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் செயல்பட்டு வரும் செயிண்ட் மேரீஸ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை அடையாறு சிஷ்யா பள்ளி மற்றும் கோபாலபுரம் டிவிஏ பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
பூந்தமல்லி அருகே திருமழிசையில் செயல்படும் பிரபல தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல சென்னை ஓட்டேரி பகுதியில் செயல்பட்டு வரும் சனா மெட்ரிக் பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பள்ளி அலுவலக இ -மெயிலுக்கு அனுப்பப்பட்டது.
மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, செட்டிநாடு வித்தியாஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி, கோபாலபுரம் DAV ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மிரட்டலை அடுத்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து சென்றனர். இதனால், அனைத்துப் பள்ளிகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்றும், இதனால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெயில் Johonsol01@gmail.com என்ற இமெயில் முகவரியில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் சென்றுள்ளது. மிரட்டல் குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை காவல்துறை (தெற்கு) கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
” சென்னையில் கல்வி நிறுவனங்களுக்கு இமெயீல் மூலமாக வெடிகுண்டூ மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளிதான். இமெயில் குறித்து விசாரணை செய்து வருகிறோம் . பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். ஒரே இமெயில் மூலம் தான் மிரட்டல் வந்துள்ளது. காலை 10.30 மணிக்கு தகவல் வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளுக்காக வெடிகுண்டு மிரட்டல் வந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்த ஆவணங்களும் கைப்பற்றபடவில்லை. இமெயில் மிரட்டலில் எந்த கோரிக்கையும் இடம் பெறவில்லை. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது தீவிர விசாரணை நடந்து வருகிறது” என பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.