பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சுவிட்சர்லாந்து மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்!
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்றும், இதனால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த முகவரியும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிரட்டல் குறித்து சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு இ மெயில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 9 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர், ஜெ.ஜெ நகர், பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், ஓட்டேரி, எஸ்பிளனேடு, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 2 வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது. குற்றவாளி மெயில் ஐடியை துவங்கிய செல்போன் எண்களை கேட்டு சென்னை சைபர் கிரைம் காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளனர். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவில் குற்றவாளி வெளி நாட்டு மெயில் நிறுவனத்தை பயன்படுத்தி இருப்பது அம்பலமாகியுள்ளது.
இதனிடையே இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.