சென்னை - மும்பை இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசர அவசரமாக தரையிறக்கம்!
சென்னையில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அந்த விமானம் நேற்று இரவு 10:30 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 5149-க்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த விமானத்தில் 196 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் இருந்தனர். தொடர்ந்து அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானக் குழுவினர் விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட வழித்தடத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய்ப் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் படையினா் ஆகியோர் விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்காததை அடுத்து விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இச்சமம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனை, ரஹேஜா மருத்துவமனை, செவன் ஹில் மருத்துவமனை, கோஹினூர் மருத்துவமனை, கேஇஎம் மருத்துவமனை, ஜேஜே மருத்துவமனை மற்றும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை உள்ளிட்ட 50 மருத்துவமனைகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.