#AirIndia விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்... டெல்லியில் அவசர தரையிறக்கம்!
நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவசரமாக விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு AI119 என்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 239 பயணிகளுடன் அமெரிக்கா புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எக்ஸ் தளம் மூலம் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக இந்த தகவல் விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அங்கு பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு தடுப்புக் குழு உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் தீவிர சோதனையில் ஈடுபட்டன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதமும் இதேபோன்று மும்பையிலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தின் கழிவறையில் 'விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது' என்று எழுதப்பட்ட காகிதம் கிடந்ததாகத் கூறப்பட்டது. ஆனால், சோதனையில் அது பொய்யான தகவல் என்று தெரிய வந்தது.