உருவ கேலி தொடர்பான கேள்வி - இயக்குநர் அட்லீ கொடுத்த பதில் !
தன்னைப் பற்றிய உருவ கேலி தொடர்பான கேள்விக்கு இயக்குனர் அட்லீ பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் அட்லீ. ராஜ ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது ஹிந்தியிலும் தடம்பதித்துவிட்டார். ஹிந்தியில் இவர் இயக்கத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து அட்லீ தற்போது, பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறார். பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலிஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்துள்ள இப்படத்தில் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது. ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக் என கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அட்லீ, விஜய், ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நிகழ்ச்சியான 'கபில் சர்மா ஷோ'வில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கபில் சர்மா, அட்லீயை பார்த்து, "முதல் முறையாக ஒரு ஸ்டாரை நீங்கள் சந்திக்கும் போது அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?" என்று உருவக் கிண்டலான தொனியில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அட்லி, நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது. இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸூக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்தான் என் முதல் படத்தை தயாரித்தார். நான் பார்க்க எப்படி இருக்கிறேன். என்னால் இதை செய்ய முடியுமா என்று எல்லாம் அவர் யோசிக்கவில்லை. நான் கதை சொன்ன விதம் அவருக்கு பிடித்திருந்தது. ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிடக் கூடாது. ஒருவரின் இதயத்தை வைத்துதான் அவரை மதிப்பிட வேண்டும் என்று அட்லி பதில் கொடுத்துள்ளார். இந்தப் பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மேலும் அட்லீக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.