பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் தர்மேந்திரா. 1960-ம் ஆண்டு வெளியான ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் தர்மேந்திரா 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘ஷோலே’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இந்திய அளவில் தர்மேந்திராவுக்கு புகழை பெற்று தந்தது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Ikkis’ திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 89 வயதான பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இச்செய்தியை பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உறுதி செய்துள்ளார்.