பாடி ஒன் கேமரா திட்டம் - இனி காவல்துறையினருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே 'நோ' வாக்குவாதம்!
நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது பாடி ஒன் கேமரா திட்டம். இத்திட்டமானது அந்த மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையில் ஈடுப்படும் காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
அடிக்கடி காவல்துறையினருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்கள், பிரச்சனைகள் போன்றவற்றை தவிர்க்க மாவட்ட காவல்துறையினால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அமைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து பல்வேறு தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை கொண்டு செல்வதாக காவல்துறையினருக்கு பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.
அதனால் காவல்துறையினர் வாகன ஓட்டிகளை தீவிரமாக கண்கானித்து வருகின்றனர். அவ்வாறு சோதனைச்சாவடிகளில் வாகனத்தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கும், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுவதால், இதனை தடுக்க நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் முதல்முறையாக பாடி ஒன் கேமரா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாகனத்தணிக்கையில் ஈடுப்படும் காவல்துறையினர்கள் கட்டாயமாக இந்த கேமராவை அணிந்திருக்க வேண்டும் எனவும் இதில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவாகும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதன் மூலம் வாகன விதிமுறை மீறல்கள் மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களை எளிதாக தடுக்க முடியும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.